செய்திகள் (Tamil News)

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் போலியாக அச்சடித்து மோசடி: 9 பேர் கைது

Published On 2017-03-22 05:40 GMT   |   Update On 2017-03-22 05:40 GMT
திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் போலியாக அச்சடித்து மோசடி செய்து, கோடிக் கணக்கில் பணம் சுருட்டிய தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகரி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களின் பெயர் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து அவர்களின் குடும்பத்தினர் 5 பேருக்கு ஆண்டு இரு முறை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் இலவசமாக அளிக்கப்பட்டது.

நன்கொடையாளர்கள் தாங்கள் தரிசனம் செய்யும் தேதியை தொலைபேசியில் சொன்னால் அதற்கு தகுந்தாற்போல் டிக்கெட் தயார் செய்யப்பட்டதும் அந்த வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளை ஊழியர்கள் பரிசோதிப்பதில்லை.

ஆனால் சில நன்கொடையாளர்கள் தேவஸ்தானம் அளிக்கும் இலவச தரிசன வி.ஐ.பி. டிக்கெட்டை பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தாத நன்கொடையாளர்களின் விவரங்களை திருடி அவர்கள் பெயரில் போலி பாஸ் புத்தகத்தை தயாரித்து அதன் மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட்டுகளை விற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன் நன்கொடையாளர்களின் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்யும் முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்தது. கடந்த 11-ந்தேதி நன்கொடையாளர் வி.ஐ.பி. டிக்கெட்டுடன் 23 பேர் வந்தனர். அவர்களின் டிக்கெட்டை ஸ்கேன் செய்த போது பார்கோடு தவறு என காட்டியது. மேலும் ஸ்கேனும் ஆகவில்லை.

இதுகுறித்து தேவஸ்தான போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 23 பேருக்கும் வி.ஐ.பி. டிக்கெட் வழங்கிய இடைதரகர்களிடம் போலீசார் விசாரித்த போது மோசடியில் தேவஸ்தான கண்காணிப்பாளராக பணி புரியும் தர்மய்யா ஈடுபட்டது தெரிந்தது.

தர்மய்யா 2014-ம் ஆண்டு முதல் வி.ஐ.பி. சலுகை டிக்கெட்டை ஏற்று கொள்ளாத நன்கொடையாளர்கள் விவரங்களை சேகரித்து உள்ளார். அந்த டிக்கெட்டுகளை கர்நாடகாவை சேர்ந்த வேணுகோபால், ராஜி ஆகியோருடன் சேர்ந்து கள்ளச்சந்தையில் ரூ.500 டிக்கெட்டை ரூ.400 முதல் ரூ.5000 வரை விற்று உள்ளார்.

2015-ம் ஆண்டு தேவஸ்தானம் இணைய தளத்தில் நன்கொடையாளர்களக்கு தனி பில்லை தொடங்கி அவர்களின் விவரங்களை பதிவு செய்தது. இதையடுத்து தர்மய்யா உள்பட 3 பேரும் ஐதராபாத்தை சேர்ந்த 2 சாப்ட்வேர் என்ஜினீயர்கள் உதவியுடன் தேவஸ்தான இணைய தளத்தை ஹேக் செய்து விவரங்களை திருடி நன்கொடையாளர்கள் பெயரில் போலி பாஸ் புத்தகம் தயாரித்து செய்தனர். அதன் மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட்டை வாங்கி கள்ள சந்தையில் விற்று உள்ளனர்.

கடந்த ஆண்டு வி.ஐ.பி. பிரேக் டிக்கெட்டில் பார் கோடு வசதியை தேவஸ்தானம் கொண்டு வந்தது. அதையும் ஹேக் செய்து போலி டிக்கெட்டுகளை தயார் செய்து விற்று உள்ளனர். இந்த ஊழலில் 3 ஆண்டுகளாக நடந்து வந்து உள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளனர்.

இதையடுத்து ஊழலில் தொடர்புடைய தேவஸ்தான கண்காணிப்பாளர் தர்மய்யா, வேணுகோபால், திருப்பதி வெங்கடரமணா, பார்த்தசாரதி, நாகபூ‌ஷணம், வி.ஜி. நாயுடு, கணேஷ், சீனிவாசலு, ராஜு, வெங்கடாசலபதி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர்களை தேடி வருகிறார்கள்.

Similar News