செய்திகள் (Tamil News)

மாணவி கற்பழித்து கொலை: போலீஸ் தவறாக கைது செய்ததால் 7 ஆண்டு சிறையில் இருந்த வாலிபர்

Published On 2017-04-01 09:15 GMT   |   Update On 2017-04-01 09:15 GMT
குண்டூரில் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தவறாக கைது செய்ததால் வாலிபர் ஒருவர் 7 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நகரி:

குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் பாட்ஷா மகள் ஆயிஷா. இவர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி பி.பார்மசி படித்து வந்தார்.

2007-ம் ஆண்டு விடுதி அறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஒரு திருட்டு வழக்கில் கைதான சத்யம்பாபுதான் மாணவி ஆயிஷாவை கற்பழித்து கொன்றதாக போலீசார் கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது போலீசார் சத்யம்பாபுதான் கொலை செய்தார் என்று ஆதாரங்களை கொடுத்தது. இதை ஏற்றுக் கொண்ட மகளிர் கோர்ட்டு சத்யம்பாபுவுக்கு 2010-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த விசாரணையில் போலீசார் தாங்கள் திரட்டிய ஆதாரங்களை ஐகோர்ட்டில் ஒப்படைத்தனர். இதில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது போலீசார் சத்யம்பாபு மீது வீண் பழிசுமத்தி செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைத்துள்ளனர் என்றும் அவரை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பு அளித்தது.

போலீசார் அளித்த தகவலில் சத்யம்பாபு பெண்கள் விடுதியில் உள்ள 8 அடி சுவரை உலக்கை மூலம் ஏறி குதித்து சென்றார் என்று கூறியுள்ளனர். அதுவும் 2 முறை இவ்வாறு சென்றதாக தெரிவித்து உள்ளனர். இது நம்பும்படி இல்லை.

சாதாரண மனிதனால் எப்படி சுவரை உலக்கை கொண்டு தாண்ட முடியும். அவர் என்ன சூப்பர்மேனா? போலீஸ் அளித்த குற்றப்பத்திரிகையில் சத்யம்பாபு விடுதிக்குள் ஆயிஷாவிடம் காதலை சொல்ல சென்றதாக கூறியுள்ளனர்.

ஆனால் மற்றொரு பகுதியில் ஆயிஷாவை பாலியல் பலாத்காரம் செய்ய தான் சென்றார் என்று தெரிவித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. கொலை செய்து விட்டு சத்யம்பாபு அந்த அறையிலேயே இருந்து கொண்டு கடிதம் எழுதினார் என்று கூறியுள்ளனர்.

கொலை செய்தவர் தப்பிக்கத்தான் பார்ப்பார். பாலியல்பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் சமயத்தில் பக்கத்து அறையில் மாணவிகள் இருந்துள்ளனர். அவர்களுக்கு சத்தம் கேட்கவில்லையா?

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தவறி விட்டனர். சத்யம்பாபுவை குற்றவாளியாக காட்ட போலீசார் முயற்சித்துள்ளனர்.

இதனால் சத்யம்பாபுவை விடுதலை செய்கிறோம். அவர் மீது வேறு எந்த வழக்குகள் இல்லையென்றால் உடனே அவரை ஜெயிலில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Similar News