செய்திகள் (Tamil News)

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் நாள்தோறும் 410 பேர் உயிரிழப்பு

Published On 2017-04-23 23:31 GMT   |   Update On 2017-04-23 23:31 GMT
இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் சராசரியாக நாள்தோறும் 410 பேர் உயிரிழந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் உண்டு. செய்திதாள்களில் சாலை விபத்து செய்திகள் இடம் பெறாத நாட்களே கிடையாது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் சராசரியாக நாள்தோறும் 410 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டில் சராசரியாக 400 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆய்வில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த 2015-ம் ஆண்டு ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு சாலை விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அடுத்த 3 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றது.

Similar News