செய்திகள் (Tamil News)

முத்தலாக் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை

Published On 2017-05-11 08:12 GMT   |   Update On 2017-05-11 08:12 GMT
முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்தி வருகிறது. பலதார மணம் குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என கூறியுள்ளது.
புதுடெல்லி:

மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய சமூகத்தில் பின்பற்றப்படுகிறது. அதேபோன்று விவாகரத்து செய்த தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. பலதார திருமணமும் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு இஸ்லாமிய பெண்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது பெண்களின் சம உரிமை மற்றும் பெண்ணுரிமையை பாதிப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து நடைமுறைகள் குறித்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

அதன்படி, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணையைத் தொடங்கியது. அப்போது, முத்தலாக் மற்றும் ஹலாலா ஆகியவை மதத்திற்கு அடிப்படையானதா இல்லையா? என்பது குறித்து ஆராய உள்ளதாகவும், பலதார மணம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என்றும் அரசியல் சாசன அமர்வு கூறியது தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.

Similar News