செய்திகள் (Tamil News)

பிளஸ்-2 தேர்வில் 12.40 லட்சம் பேர் தோல்வி: பீகார் அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2017-06-01 06:06 GMT   |   Update On 2017-06-01 06:42 GMT
பீகாரில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 12.40 லட்சம் பேர் தோல்வி அடைந்ததால் அம்மாநில அரசை கண்டித்து மாணவர்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பாட்னா:

பீகாரில் பெரும்பாலான பள்ளிகளில் பொதுத் தேர்வு நடைபெறும் போது மாணவ-மாணவிகள் காப்பி அடித்து எழுதுவது போன்ற புகைப்படங்களுடன் செய்தி கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்தன. இதனால் அம்மாநில பள்ளி தேர்வு வாரியம் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.

இந்த நிலையில், பீகாரில் ‘பிளஸ்-2’ தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 30 சதவீதம் பேர்தான் தேர்ச்சி அடைந்தனர். அறிவியல் மாணவர்கள் 70 சதவீத பேரும், கலைப்பிரிவில் 76 சதவீதம் பேரும் தோல்வி அடைந்தனர்.

தேர்வு எழுதியவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவ-மாணவிகள் பெயிலானார்கள். அதாவது 12.40 லட்சம் மாணவ-மாணவிகள் ‘பிளஸ்-2’ தேர்வில் தோல்வி அடைந்தனர்.

இந்த பொதுத் தேர்வில் மாநில பள்ளி தேர்வு வாரியம் கடுமையான விதிமுறைகளையும், புதிய கண்காணிப்பு முறைகளையும் பின்பற்றியது. இதன் காரணமாகவே ‘பிளஸ்-2’ தேர்வு முடிவுகள் இந்த முறை பெரும் சரிவை சந்தித்து இருக்கிறது.

கடந்த வருடம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாததால் அறிவியல் மாணவர்களின் 67 சதவீத பேரும், கலை மாணவிகள் 80.87 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இந்த மோசமான தேர்வு முடிவுக்கு பீகார் மாநில பள்ளி தேர்வு வாரியம் தான் காரணம் என்று மாணவ- மாணவிகள் குற்றம் சாட்டினர். இதை கண்டித்து பீகாரில் மாநிலம் முழுவதும் மாணவர்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விடைத்தாள்கள் திருத்துவதில் குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும், விடைத் தாள்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாட்னாவில் உள்ள மாநில பள்ளி தேர்வு வாரியம் முன்பு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மாணவர்கள் கூட்டத்தை கலைத்தனர். இதில் 12 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

500-க்கும் அதிகமான மாணவர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் கல்வி மந்திரி ஆனந்த் கிஷோர் கொடும்பாவியையும் எரித்தனர். இந்த தேர்வு முடிவுகள் எல்லாம் மிகப் பெரிய மோசடி என்று மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே விடைத் தாள்கள் திருத்தப்பட்டதில் எந்தவித குறைபாடும் இல்லை என்று பீகார் மாநில பள்ளி தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

‘பிளஸ்-2’ தேர்வு தோல்வி காரணமாக அங்கு 2 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News