செய்திகள் (Tamil News)

குஜராத் தேர்தலுக்கு முன்பு ராகுலுக்கு தலைவர் பதவி: காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம்

Published On 2017-10-31 05:12 GMT   |   Update On 2017-10-31 05:12 GMT
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பே ராகுல்காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி:

சோனியாகாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால், காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அவரது மகன் ராகுல்காந்தியிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதற்கு வசதியாக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு எப்போது? நவம்பர் மாதம் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தை கூட்டி ராகுலை தலைவராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரசார பணிகளை செய்ய வேண்டியதிருப்பதால் ராகுலை தலைவராக தேர்வு செய்யும் கூட்டத்தை தள்ளிப் போடலாமா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எப்போது ராகுல் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்பது உறுதியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் ராகுலுக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் புதிய பயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்திருப்பதால், ராகுல் பிரசாரம் செய்தும் காங்கிரஸ் தோற்று விட்டதாக இமேஜ் ஏற்படும்.

எனவே குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பே ராகுல்காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவு தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சோனியாகாந்தியிடம் இதுகுறித்து அவர்கள் பேசி வருகிறார்கள்.



காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சோனியா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ராகுலை தலைவராக நியமனம் செய்து கூட அறிவிக்கலாம். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சோனியா மிக விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Similar News