செய்திகள் (Tamil News)

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கு பயன் அளிப்பதாக இருக்கவேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published On 2018-01-02 01:47 GMT   |   Update On 2018-01-02 01:47 GMT
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். #NarendraModi #Science #Innovation
கொல்கத்தா:

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

கொல்கத்தாவில் பேராசிரியர் சத்யேந்திரநாத் போசின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நமது இளைஞர்களிடம் அறிவியல் மீதான மோகத்தை உருவாக்குவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும் நாம் அறிவியல் தகவல் தொடர்பை பெரிய அளவில் கொண்டு செல்லவேண்டும். இதற்கு மொழி எந்த விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது.

இந்த குறிக்கோளை அடைவதற்கு அனைத்து மாநில மொழிகளிலும் அறிவியல் தகவல்களை கொண்டு செல்வது அவசியம் ஆகும்.

தொழில்நுட்ப உருவாக்கத்தில் விஞ்ஞானிகளது சிந்தனை புதிய திசையை நோக்கி பயணிப்பதாக இருக்கவேண்டும். நமது அறிவியல் கண்டு பிடிப்புகளும், ஆராய்ச்சிகளில் கிடைக்கும் முடிவுகளும் நாட்டின் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் அமைதல் அவசியம்.

இதற்காகத்தான் மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி உள்ளது. அதில் சூரிய மின்சக்தி, பசுமை ஆற்றல், நீர்பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவை தனித்தனி அறிவியல் துறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

இதில் மத்திய அரசின் தொடங்கிடு இந்தியா மற்றும் திறன் மேம்பாடு இயக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் உயிர் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் துறையினர் பங்கேற்கும் 20 கல்வி நிறுவனங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒரு மாணவருக்கு குருவாக அமையவேண்டும். இந்த வகையில், ஒரு லட்சம் விஞ்ஞானிகளை நம்மால் நாட்டில் உருவாக்கிட இயலும். இந்திய அறிவியல் சமூகத்தினர் புதிய சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் கொள்ளவேண்டும். அப்போதுதான் அவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண இயலும்.

நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் நாட்டின் போற்றுதலுக்கு உரியவர்கள். இந்த உலகத்தின் கவனத்தையே ஈர்க்கும் விதமாக இஸ்ரோ நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

#tamilnews #NarendraModi #Science #Innovation

Similar News