செய்திகள் (Tamil News)

காஷ்மீரில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்தியவன் 10-ம் வகுப்பு மாணவன்

Published On 2018-01-02 02:47 GMT   |   Update On 2018-01-02 02:47 GMT
காஷ்மீரில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் 10-ம் வகுப்பு மாணவன் என்றும், போலீஸ்காரரின் மகன் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. #JammuKashmir
ஸ்ரீநகர்:

காஷ்மீரில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் 10-ம் வகுப்பு மாணவன் என்றும், போலீஸ்காரரின் மகன் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஸ் இ முகமதுவின் தளபதி நூர் முகமது டன்ட்ரே, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அதற்கு பயங்கரவாதிகள் பழிக்குப்பழி தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, புலவாமா மாவட்டம் அவந்திப்போராவில் லேத்போரா என்ற இடத்தில் அமைந்துள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) முகாம் மீது ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதிகள் 3 பேர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதில் ஒரு போலீஸ்காரர் பலியான நிலையில், மத்திய ஆயுதப்படை போலீசார் எதிர்தாக்குதலுக்கு தயாரானார்கள். அதற்குள், 3 பயங்கரவாதிகளும் முகாமுக்குள் புகுந்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், மேலும் 4 வீரர்களும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

மீதி இருந்த ஒரு பயங்கரவாதியை வீழ்த்த நேற்றும் சண்டை நீடித்தது. இறுதியில், அந்த பயங்கரவாதியும் கொல்லப்பட்டான். இந்த சண்டை 36 மணி நேரம் நீடித்தது.

நேற்று முன்தினம் பலியான 2 பயங்கரவாதிகளின் உடல்கள் அன்றைய தினமே கைப்பற்றப்பட்டன. அவர்களின் அடையாளமும் கண்டறியப்பட்டது.

ஒருவன் பெயர் மன்சூர் பாபா (வயது 22). புலவாமா மாவட்டம் துருப்கம் பகுதியை சேர்ந்தவன். மற்றொருவன் 10-ம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அவன் பெயர் பர்தீன் அகமது காண்டே. அவனுக்கு 16 வயதுதான் ஆகிறது. திரால் பகுதியை சேர்ந்த அவன், 3 மாதங்களுக்கு முன்புவரை, பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அதன்பிறகுதான், பயங்கரவாதி ஆனான். அவன் தந்தை ஒரு போலீஸ் காரர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் ஸ்ரீநகரில், அவர் காஷ்மீர் மாநில போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானிக்கும் திரால்தான் சொந்த ஊர் ஆகும்.

மத்திய ஆயுதப்படை போலீசாருடனான சண்டையில் நேற்று பலியான 3-வது பயங் கரவாதியின் உடலும் கைப் பற்றப்பட்டது. ஆனால், அவனைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை.

இதற்கிடையே, இந்த சண்டையில் பலியான 5 வீரர்களில் ஒருவரான மத்திய ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் குல்தீப் ராய், இமா சலபிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவரது மறைவுக்கு இமாசலபிரதேச கவர்னர் ஆச்சர்யா தேவ்ரத்தும், முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குல்தீப் ராய் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.

#TamilNews #PakistanTerrorist #Suicideattack #PulwamaEncounter #JammuKashmir

Similar News