செய்திகள் (Tamil News)

ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் மரணம்: சர்ச்சை கருத்து கூறிய பா.ஜ.க. எம்.பி. மன்னிப்பு கேட்டார்

Published On 2018-01-02 08:13 GMT   |   Update On 2018-01-02 08:13 GMT
ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் மரணம் அடைவதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது கருத்திற்காக பா.ஜ.க. எம்.பி. மன்னிப்பு கேட்டார்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. நேபாள் சிங், ‘ராணுவத்தில் ஒவ்வொரு நாளும் வீரர்கள் உயிரிழக்கின்றனர். சண்டையில் வீரர்கள் பலியாகாத நாடு இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் குறித்து கேட்டபோது, ‘ஒரு கிராமத்தில் சாதாரணமாக சண்டை ஏற்பட்டாலே யாராவது காயம் அடைந்துவிடுகிறார்கள். உயிர்களை காப்பாற்ற உதவும் சாதனம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.  தோட்டாக்களை செயலிழக்க செய்யும் கருவி எதாவது இருந்தால் சொல்லுங்கள், அதனை நடைமுறைப்படுத்துவோம்’ என்றார் நேபாள் சிங்.

அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கருத்து குறித்து விளக்கம் அளித்தார் நேபாள் சிங். ராணுவ வீரர்களை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை என்று கூறிய அவர், தனது கருத்திற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். #tamilnews

Similar News