செய்திகள்
சாகித்ய அகாடமி தலைவர் தேர்தலில் கன்னட எழுத்தாளர் வெற்றி
இந்தியாவில் எழுத்தாளர்களை கவுரவிக்கும் மிகப்பெரிய அமைப்பான சாகித்ய அகாடமியின் தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பிரபல கன்னட எழுத்தாளரும் கவிஞருமான சந்திரசேகர கம்பாரா வெற்றி பெற்றார். #SahityaAkademi
புதுடெல்லி:
மத்திய அரசால் கடந்த 1954-ம் ஆண்டில் நிறுவப்பட்ட சாகித்ய அகாடமி, இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்டதாகும். இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களையும், பயிற்சி முகாம்களையும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் சாகித்ய அகாடமி நடத்தியுள்ளது.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளையும் சாகித்ய அகாடமி செய்து வருகிறது.
மேலும், நாட்டிலுள்ள 24 முக்கிய இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் சாகித்திய அகாடமி மதிப்பிற்குரிய விருதாகும். இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சாகித்ய அகாடமி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த பிரபல இந்தி எழுத்தாளரான விஸ்வநாத் பிரசாத் திவாரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, காலியாக உள்ள தலைவர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் உள்ள சாகித்ய அகாடமி தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் நடைபெற்றது.
பிரபல மராத்தி எழுத்தாளர் பால்சந்திரா நெமாடே, ஒரியா எழுத்தாளர் பிரதிபா ரே, பிரபல கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரா ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் மூவருமே ‘ஞானபீடம்’ விருது பெற்றவர்கள். இதில், கன்னட மொழி நாடக ஆசிரியரும், கவிஞரும், நாவலாசிரியருமான சந்திரசேகர கம்பாரா வெற்றி பெற்றார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள குடகேரி பகுதியில் 2-1-1937 அன்று பிறந்த சந்திரசேகர கம்பாரா, ஹம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் துவக்கக்கால துணை வேந்தராக பணியாற்றியுள்ளார்.
தேசிய நாடகப் பள்ளியின் தலைவராகவும் முன்னர் பொறுப்புவகித்த இவர், 1983-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதையும், 1991-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதையும், 2001-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2011-ம் ஆண்டில் ஞானபீடம் விருதையும் பெற்று, கடந்த 2001-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமியின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamillnews #SahityaAkademi