நாளை பதவியேற்பு விழா.. அழைப்பிதழில் மாறிய தேவேந்திர பட்னாவிஸ் பெயர்
- புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
- ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு மும்பையில் இன்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அம்மாநில தலைமைச் செயலாளர் சுஜாதா சௌனிக் வெளியிட்டுள்ள பதவியேற்பு விழா அழைப்பிதழில், முதலமைச்சர் பெயரை "தேவேந்திர சரிதா கங்காதரராவ் ஃபட்னாவிஸ்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சரிதா என்பது அவரது தாயின் பெயர், கங்காதர் என்பது அவரது தந்தை. மகாராஷ்டிரா வாசிகள் தங்கள் தந்தையின் பெயரை இடைப் பெயராகப் பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், தேவேந்திர பட்னாவிஸ் தனது தாயின் பெயரை அதிகாரப்பூர்வ நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் பாஜக தலைவர் 'தேவேந்திர கங்காதர் ஃபட்னாவிஸ்' என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு பதவியேற்பு விழாக்களுக்கான அழைப்புகளில், ஃபட்னாவிஸ் பதவியேற்றபோது, அவரது தாயின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.