'சம்பல்' பயணம்: திட்டவட்டமாக மறுத்த போலீஸ்.. திரும்பி 'டெல்லி'க்கே செல்லும் ராகுல் - பிரியங்கா
- சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
- போலீசுடன் தான் தனியாக சம்பல் செல்லவும் தயார் என்று அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர். மக்கள் போலீஸ் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும் நீதிமன்றம் மசூதி ஆய்வை தள்ளிப்போட்டது.
இந்நிலையில் கலவரத்தால் பாதித்தவர்களை சந்திக்க மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை 10.15 மணியளவில் சகோதரியும், வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியுடன் சம்பல் நோக்கி காரில் புறப்பட்டார்.
11 மணியளவில் டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் காசியாபூர் எல்லையில் தடுப்புகளை அமைத்து அவர்களின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி தன்னை அனுமதிக்குமாறு போலீசிடம் கூறினார். ஆனால் போலீஸ் அதற்குத் திட்டவட்டமாக மறுத்தது.
இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசியல் சாசனத்தின் படி தனக்கு செல்ல உரிமை உள்ளது என்று தெரிவித்தார். போலீசுடன் தான் தனியாக சம்பல் செல்லவும் தயார் என்று அவர் தெரிவித்தார்.
அனுமதி வழங்காததற்கு பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் திட்டவட்டமாக அனுமதி வழங்க மறுத்த நிலையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி மீண்டும் டெல்லி திரும்பியுள்ளனர்.