தொழில்நுட்ப கோளாறு- பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு
- ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்தது.
- ராக்கெட் ஏவுதலுக்கு இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த 2 செயற்கை கோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இது நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் 3.08 மணிக்கு தொடங்கியது. இதனை முடித்துக்கொண்டு இன்று(புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ப்ரோபா 3 செய்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.