செய்திகள் (Tamil News)

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போலி விராட்கோலி

Published On 2018-05-28 10:17 GMT   |   Update On 2018-05-28 10:17 GMT
மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்துக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலியை அழைத்து வருவதாக கூறி அவரை போல உருவம் கொண்டவரை வேட்பாளர் அழைத்து வந்த சம்பவம் நடந்துள்ளது. #ViratKohli

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடந்த வருகிறது. இந்த நிலையில் சிரூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்க கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான வித்தல் கண்பத் கவடி என்பவர் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பிரபல கிரிக்கெட் வீரர் விராட்கோலி தன்னை ஆதரித்து 25-ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்ய கிராமத்துக்கு வருகிறார் என்று அறிவித்தார்.

அதோடு விராட் கோலியும் அவரும் நிற்பது போன்ற நோட்டீசுகளை அச்சடித்து கிராமம் முழுக்க ஒட்டினார். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 25-ந்தேதி அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மக்கள் கூடினார்கள். கிரிக்கெட் வீரர் கோலியைப் பார்க்க பக்கத்து ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர்.

அப்போது ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து வேட்பாளர் கண்பத் இறங்கினார்.

அவரை தொடர்ந்து விராட் கோலி போலவே அச்சு அசலாக இருந்தவர் இறங்கினார். அவரை பார்க்க கிரிக்கெட் ரசிகர்களும் பொதுமக்களும் முண்டியடித்தனர்.

சிறிது நேரம் கழித்துதான் அவர் விராட் கோலி அல்ல. அவர் போல இருக்கும் போலி நபர் என்று தெரிய வந்தது. வேட்பாளரின் தில்லுமுல்லு அம்பலமானதும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்தனர்.

இந்த புதுமையான பிரசாரத்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று வேட்பாளர் கண்பத் நம்பிக்கையுடன் உள்ளார். #ViratKohli

Tags:    

Similar News