செய்திகள்

கேரளாவில் 3 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது

Published On 2018-05-29 05:23 GMT   |   Update On 2018-05-29 05:23 GMT
கேரளாவில் இன்று தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதற்கேற்ப நேற்று மாலை முதல் கேரளாவின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அந்தமான், லட்சத்தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து கேரளாவில் இன்று (29-ந்தேதி) தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதற்கேற்ப நேற்று மாலை முதல் கேரளாவின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.

கேரளாவின் பல பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் குற்றால அருவியில் வெள்ளம் கொட்டத்தொடங்கியது.

கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை மூலம் தான் கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா, மராட்டியம் மற்றும் வட மாநிலங்களிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாடு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மூலம் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் சராசரியாக 60 சதவீத மழை பெய்யும் என்று 2 நாட்களுக்கு 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய கடலிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் அலைகளின் சீற்றமும், கடல் கொந்தளிப்பும் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Tamilnews
Tags:    

Similar News