செய்திகள்

கர்நாடக மேல்சபைக்கு 11 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

Published On 2018-06-04 10:42 GMT   |   Update On 2018-06-04 10:42 GMT
கர்நாடக மாநில சட்டமன்ற மேல்சபைக்கு இன்று 11 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேல்சபையில் உள்ள 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.

காலியாகும் மேல்சபை பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த ரவிகுமார், தேஜஸ்வினி கவுடா, ரகுநாத் ராவ் மல்காபுரே, கே.பி.நஞ்சுன்டி, ருத்ரே கவுடா ஆகியோர் இந்த தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் சி.எம்.இபுராகிம், கே.கோவிந்தராஜ், அரவிந்த் குமார், ஹரிஷ் குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் எப்.எம்.பாரூக், எஸ்.எல்.பைரே கவுடா ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மேற்கண்ட 11 பேரும் கர்நாடக மாநில சட்டமன்ற மேல்சபைக்கு இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று தேர்வாகியுள்ளவர்களில் ரகுநாத் ராவ் மல்காபுரே, சி.எம்.இபுராகிம் மற்றும் கே.கோவிந்தராஜ் தற்போது மேல்சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்த தேர்தலின் மூலம் இவர்களின் பதவிக்காலம் இன்னும் ஆறாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News