செய்திகள்
ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த மனைவிகள் வேண்டாம் - மரத்தை ரிவர்சில் சுற்றி வேண்டிய கணவர்கள்
ஏழேழு ஜென்மத்துக்கும் இவர்களே கணவராக வர வேண்டும் என மனைவிகள் மரத்தை சுற்றி வரும் பண்டிகையில், இந்த மனைவிகள் எந்த ஜென்மத்துக்கும் வேண்டாம் என கணவர்கள் மரத்தை எதிர் திசையில் சுற்றி வந்துள்ளனர்.
மும்பை:
வட மாநிலங்களில் வத் பூர்னிமா என்ற பண்டிகளை திருமணம் ஆன பெண்களால் கொண்டாடப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களது கணவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும், ஏழு ஜென்மங்களுக்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் என வேண்டிக்கொண்டு கோவில் மரத்தை சுற்றி வந்து அதில் கயிறு ஒன்றை கட்டுவார்கள்.
எமனிடம் இருந்து சாவித்திரி தனது கணவர் சத்தியவானின் உயிரை போராடி பெற்ற புராணக்கதையை அடிப்படையாக கொண்டு இந்த பிராத்தனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஆவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வாலுஜ் என்ற பகுதியில் உள்ள பெண்கள் இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
அப்பகுதியில் மனைவிகளால் பாதிக்கப்பட்டோர் அமைப்பை வைத்துள்ள ஆண்கள் சிலர், அதே நாளில் கோவிலுக்கு வந்து மரத்தை எதிர்த்திசையில் சுற்றி வந்துள்ளனர். மேலும், ‘ஏழேழு ஜென்மத்துக்கு இந்த மனைவி வந்துவிடக்கூடாது’ என்ற கோஷத்தை எழுப்பிய படி சுற்றி வந்த அவர்கள் மரத்தில் கயிறை கட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் பாரத் புலார் கூறுகையில், ‘சட்டத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை கொண்டு எங்களது மனைவிகள் எங்களை துன்புறுத்தி வருகின்றனர். ஏழு நொடிகள் கூட அவர்கள் உடன் எங்களால் வாழ முடியாத நிலையில், எப்படி ஏழு ஜென்மங்கள் வாழ முடியும்’ என தெரிவித்துள்ளார்.