செய்திகள்

இந்தியாவில் 2016–ம் ஆண்டில் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Published On 2018-07-08 16:10 GMT   |   Update On 2018-07-08 16:10 GMT
இந்தியாவில், கடந்த 2016–ம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள மத்திய அரசின் தகவல்கள் குறிப்பிடுகிறது. #Children #Kidnapped #India
புதுடெல்லி:

இந்தியாவில், கடந்த 2016–ம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 40.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த விகிதம் 22.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. கடந்த 2015–ம் ஆண்டில் 41 ஆயிரத்து 893 குழந்தைகளும், 2014–ம் ஆண்டில் 37 ஆயிரத்து 854 குழந்தைகளும் கடத்தப்பட்டு இருந்தனர். அந்த வகையில் பார்க்கிறபோது, குழந்தை கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கடந்த 2016–ம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2015–ம் ஆண்டில் 94 ஆயிரத்து 172 வழக்குகளாக இருந்தது. இதன் மூலம் ஓர் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சரியாக 13.6 சதவீதம் உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிகமான குற்றங்கள், குழந்தைகள் கடத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் மற்றும், சிறுவர் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குழந்தை கடத்தல் பீதியால் அப்பாவி நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பான மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.  #Children #Kidnapped #India 
Tags:    

Similar News