செய்திகள்

நாடு முழுவதும் ஸ்மார்ட்போனில் ஆதார் தொடர்பு எண் தானாக பதிவானதால் பரபரப்பு

Published On 2018-08-03 21:10 GMT   |   Update On 2018-08-03 21:10 GMT
நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்களில் நேற்று ஆதார் உதவி அழைப்பு எண் தானாக பதிவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை வேண்டாதவர்களின் வேலை என்று ஆதார் ஆணையம் குற்றம்சாட்டியது. #AadhaarCommission
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் வைத்துள்ள ஆயிரக்கணக்கானோருக்கு அவர்களின் போனில் நேற்று 1800-300-1947 என்ற இலவச உதவி அழைப்பு எண் பதிவானது. அந்த எண் UI-D-AI என்ற பெயருடன் தொடர்புக்காக சேமித்து வைக்கும் ‘கான்டாக்ட்ஸ்’ பகுதியில் தானாகவே பதிந்தது. இதனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த எண், ஆதார் ஆணையத்துடன் தொடர்பு கொள்வதற்கான எண்ணாக இருந்ததால் அவர்களிடையே மேலும் குழப்பம் அதிகரித்தது.

இதனால் தங்களது ஆதார் பதிவு தகவல் அனைத்தும் திருடப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதார் ஆணையத்தை ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டு தங்களது ஸ்மார்ட் போனில் தானாக ஆதார் ஆணைய இலவச உதவி அழைப்பு எண் பதிவானது பற்றி கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தனர்.

நாங்களாக தொடர்பு எண்ணை பதிவு செய்யாத பட்சத்தில் இந்த எண் மட்டும் மந்திரம் போட்டது போல் எப்படி தொடர்பு எண் சேமிப்பு பகுதியில் பதிவானது என்றும் இவ்வாறு செய்ய முடிந்தால் எங்களது செயல்களை கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவும் அவர்கள் சரமாரியாக டுவிட்டர் பதிவில் கேள்வியும் எழுப்பினர்.

அப்போதுதான் அது, ஆதார் ஆணையத்துடன் தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த உதவி போன் நம்பர் என்பது தெரிய வந்தது.

அதே நேரம் ஐ போன் போன்ற விலையுயர்ந்த போன்களிலும், சாதாரண செல்போன்களிலும் இந்த இலவச உதவி எண் தானாக பதிவாகவில்லை.

இது குறித்து ஆதார் ஆணையம் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆதார் ஆணையத்தின் பயன்பாட்டில் இல்லாத பழைய உதவி எண் ஸ்மார்ட்போனில் தானாக பதிவானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆதார் ஆணையம் சார்பாக எந்தவொரு செல்போன் நிறுவனத்திடமோ அல்லது செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்திடமோ இதுபோன்ற வசதியை இணைக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் பதிவான எண் என குறிப்பிடப்படும் 1800-300-1947 என்பது ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் அல்ல. மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டாத இந்த வீண் வேலையை சிலர் செய்துள்ளனர்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகத்தில் இருக்கும் ஆதார் ஆணையத்தின் சரியான இலவச உதவி அழைப்பு எண் 1947 ஆகும்.

இதேபோல் பொதுச் சேவை எண்கள் பட்டியலிலும் 1800-300-1974 அல்லது 1947 என்ற எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல்போன் தயாரிப்பு நிறுவனத்திடமோ ஆதார் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதேநேரம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ தலைவர் ஆர்.எஸ்.சர்மவை ஆதார் எண் விவகாரத்தில் வம்புக்கு இழுத்த பிரான்ஸ் நாட்டின் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன், தனது டுவிட்டர் பதிவில் ஆதார் ஆணையத்தை கிண்டலடித்தார்.

அவர் தனது பதிவில், “ஆதார் அட்டை இல்லாமலேயே பல்வேறு செல்போன் சேவை நிறுவனங்கள் மூலம் ஏராளமானோருக்கு ஆதார் செயலி பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் நம்பர் உங்களுக்கு தெரியாமலேயே உங்களது செல் போன்களில் இயல்பாக எப்படி கட்டமைக்கப்பட்டது? இதற்கு உங்களால் விளக்கம் அளிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் பலர், தானாக பதிவாகி இருந்த ஆதார் ஆணையத்தின் இலவச உதவி போன் எண்ணை படம் பிடித்து அதை பகிர்ந்து கொண்டு தங்களது உரையாடல்களில் கேலியும் செய்தனர்.



ஒரு குறும்புக்காரர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஆதார் ஆணையத்தின் போன் எண் மந்திரம் போட்டதுபோல் எனது செல்போனில் பதிவாகி இருக்கிறது. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. உளவு நிறுவனம் போல் அவர்கள் எங்களை மோப்பம் பிடிக்கிறார்களா?...’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

எது எப்படியோ, ஸ்மார்ட் போனில் தானாக பதிவான ஆதார் ஆணையத்தின் இலவச அழைப்பு உதவி எண் இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது என்றே கூறவேண்டும். அது இன்னும் கூட யாருக்கும் புரியாத புதிர்தான். #AadhaarCommission
Tags:    

Similar News