செய்திகள்

பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் - பீகார் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ்

Published On 2018-08-23 23:39 GMT   |   Update On 2018-08-23 23:39 GMT
பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்ககோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அம்மாநில அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. #NHRC
பாட்னா :

பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தாமோதர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிம்லேஸ் ஷா(20). இவர் கடந்த 19-ம் தேதி திடீரென காணாமல் போனதால் அந்த ஊர்மக்கள் இவரை தேடி திரிந்துள்ளனர்

இதற்கிடையே, அதே மாவட்டத்தில் உள்ள பியா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே இளைஞர் ஒருவரின் உடல் அடுத்த நாள் 20-ம் தேதி கைப்பற்றப்பட்டது. அந்த சடலம் காணாமல் போன பிம்லேஸ் ஷா தான்  என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள், பிம்லேஸ் ஷாவை அந்த பகுதியில் வசிக்கும் விபச்சார கும்பல்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதினர். அதிலும் குறிப்பாக ஒரு பெண் மீது சந்தேகப்பட்டனர். இதையடுத்து அங்கு சென்ற கிராம மக்கள், அந்த பகுதியில் இருந்த கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

பின்னர் சந்தேகப்பட்ட பெண்ணை அடித்து தாக்கிய மக்கள் அவரை நிர்வாணமாக்கி அந்த பகுதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி தெரு தெருவாக இழுத்துச்சென்ற சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கக்கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் பீகார் அரசுக்கு நோட்டிஸ் நேற்று அனுப்பியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு வழங்க அம்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. #NHRC
Tags:    

Similar News