செய்திகள் (Tamil News)

கேரளாவை கலவர பூமியாக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சி- முதல்-மந்திரி பினராய் விஜயன்

Published On 2018-10-23 13:36 GMT   |   Update On 2018-10-23 13:36 GMT
சபரிமலையை போராட்டக்களமாக்கவும், கேரளாவை கலவர பூமியாக மாற்றவும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சி செய்வதாக கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார். #Sabarimala #PinarayiVijayan #RSS
திருவனந்தபுரம்:

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலை ஒரு புனித பூமி. இங்கு அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை கேரள அரசு செயல்படுத்தியது.

சபரிமலைக்கு சென்ற பக்தர்களை கேரள அரசு தடுக்கவில்லை. போலீசாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சியை மட்டுமே கேரள அரசு செய்தது.

ஆனால் சபரிமலையில் திரண்ட போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை பாதுகாக்க போலீசார் பெரும் சிரமப்பட்டனர்.

அப்போது நடந்த கல்வீச்சில் பல போலீசார் காயம் அடைந்தனர். சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களும், பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

சபரிமலையை போராட்டக்களமாக்கவும், கேரளாவை கலவர பூமியாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக சபரிமலைக்கு சென்ற வாகனங்கள் தடுக்கப்பட்டன. பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். பெண் பக்தர்களும் கல்வீச்சில் காயம் அடைந்துள்ளனர். அவர்களின் வீடுகளும் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.



பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது கேரளாவில் இதுதான் முதல்முறையாகும்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், போராட்டக்காரர்களிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சபரிமலையில் தடியடி நடத்தப்பட்டது.

உண்மையான பக்தர்களின் பாதுகாப்புக்காகவே போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #PinarayiVijayan #RSS
Tags:    

Similar News