செய்திகள்

13 மனித உயிர்களைக் குடித்த பெண் புலி சுட்டுக்கொலை - பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்

Published On 2018-11-03 06:08 GMT   |   Update On 2018-11-03 06:08 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் 13 மனித உயிர்களை காவு வாங்கிய பெண் புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதனை உள்ளூர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். #TigressAvani #ManEatingTigress #TigressShotDead
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த அவனி என்ற பெண் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பேரை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து அச்ச உணர்வுடன் வசித்து வந்தனர்.

மனித ருசி கண்ட அந்த புலி, தொடர்ந்து மனித வேட்டையாடும் என்பதால் அதனை சுட்டுக்கொல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது. ஆனால், இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புலியை சுட்டுக் கொல்லாமல் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



இதையடுத்து கடந்த சில தினங்களாக பெண் புலி அவனியை காடு முழுவதும் தேடி வந்த வனத்துறையினர், நேற்று இரவு சுட்டுக் கொன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். #TigressAvani #ManEatingTigress #TigressShotDead

Tags:    

Similar News