செய்திகள் (Tamil News)

கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

Published On 2018-12-22 02:21 GMT   |   Update On 2018-12-22 02:21 GMT
கம்ப்யூட்டர்களை கண்காணிக்க 10 உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #CentralGovernment #ComputerMonitoring
புதுடெல்லி :

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குனரகம், உளவுப்பிரிவு உள்ளிட்ட 10 அமைப்புகள் கண்காணிக்கவும், அதில் பரிமாறப்படும் தகவல்களையும், சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களையும் ஆய்வு செய்யவும் அதிகாரம் வழங்கப்படுவதாக அறிவித்தது.

இதற்கு காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “மோடி அரசு வேட்டை அரசாக மாறிவிட்டது. பா.ஜனதா அரசு தனது தோல்விகளால் மூர்க்கத்தனமாக தகவல்களை தேடும் நிலைக்கு சென்றுவிட்டதை இது தெளிவாக காட்டுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த்சர்மா, “இந்த உத்தரவின் மூலம் பா.ஜனதா அரசு இந்தியாவை கண்காணிப்பு மாநிலமாக மாற்றிவிட்டது. இது தனிநபர் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இறுதி தாக்குதல். தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான நேரடி மோதல்” என்று கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, “இந்த உத்தரவு தேச பாதுகாப்புக்கு மட்டுமே என்றால், இதற்காகத்தான் மத்திய அரசில் ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளதே. ஆனால் ஏன் அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்பட வேண்டும்? பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், “இந்தியா 2014 மே மாதத்தில் இருந்து அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் இருக்கிறது. இறுதிக்கட்ட ஒரு சில மாதங்களில் மோடி அரசு அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை துண்டிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது தானா?” என்று கூறியுள்ளார். #CentralGovernment #ComputerMonitoring 
Tags:    

Similar News