செய்திகள்

70 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் கட்டாயம் பணி வழங்க வேண்டும்- ம.பி அரசு உத்தரவு

Published On 2019-02-05 05:06 GMT   |   Update On 2019-02-05 05:06 GMT
மத்தியபிரதேசத்தில் உள்ள நிறுவனங்கள் அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களை 70% கட்டாயம் பணியில் அமர்த்த வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #MPGovernment #Localyouthjob #KamalNath
போபால்:

மத்தியபிரதேச மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்  முதல் மந்திரி கமல் நாத் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், நேற்று அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அம்மாநிலத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்தந்த பகுதியில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு 70% பணி கட்டாயம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் சலுகைகளை பெற நினைக்கும் அனைத்து நிறுவனங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என கூறினார். இதனையடுத்து அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை வேண்டாம் என்று கூறி எந்தவொரு வேண்டுகோளும்  வராததால், புதிய உத்தரவின்படி அனைத்து தொழில் நிறுவனங்களும் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என தொழில் துறையின் முதன்மை செயலாளர் முகமது சுலைமான் தெரிவித்தார்.

முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய வேலைவாய்ப்பு குறித்து கமல் நாத் கடந்த டிசம்பரில் ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது நடைமுறைபடுத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19-ம் தேதி இந்த புதிய நடைமுறையின்படி தொழில்துறைகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மத்தியபிரதேச மாநில அரசு தொழில் நிறுவனங்கள் அமைக்க அனைத்து உதவிகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும்  ‘இன்வெஸ்ட் மத்தியபிரதேஷ்’ உச்சிமாநாடு இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது.  இந்த மாநாட்டின்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தலைமை செயலாளர் மோகந்தி தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் கொள்கையின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளும், வேலைவாய்ப்புக்கான முகாம்களும் நடத்தப்பட்டு, உதவித் தொகை வழங்கப்படும். பின்னர் 70 சதவீத வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படும். #MPGovernment #Localyouthjob #KamalNath 
Tags:    

Similar News