செய்திகள்

யாருக்காக மோடி சொத்து சேர்க்க வேண்டும்? - ராஜ்நாத் சிங் கேள்வி

Published On 2019-02-09 15:16 GMT   |   Update On 2019-02-09 15:16 GMT
பிரதமர் மோடியின் நேர்மையைப்பற்றி யாருமே குறைசொல்ல முடியாது. அவர் லஞ்சம் வாங்கி யாருக்காக சொத்து சேர்க்க வேண்டும்? என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். #Modishonesty #Rajnathsingh
பாட்னா:

பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்களை சேர்க்கலாம்? என்று பல்வேறு கல்வியாளர்களை சந்தித்து கருத்துகளை அறிவதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பீகார் மாநில தலைநகரான பாட்னா வந்துள்ளார்.

அப்போது அங்கு கூடி இருந்தவர்களிடையே கலந்துரையாற்றிய ராஜ்நாத் சிங், பிரதமர் மோடிக்கு எதிராக கூறப்படும் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அவரை எனக்கு பல காலமாக தெரியும். அவருக்கு எதிராக யார் வேண்டுமானாலும், எந்த குற்றச்சாட்டையும் சுமத்தட்டும்.

அவர் சரியாக பணியாற்றவில்லை. இன்னும் அதிகமாக செய்திருக்கலாம் என்று குறை கூறட்டும். ஆனால், பிரதமர் மோடியின் நோக்கங்கள் மற்றும் நேர்மையைப் பற்றி மட்டும் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. 

அவர் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி யாருக்காக சொத்து சேர்த்து வைக்க வேண்டும்? மனைவிக்காகவா, பிள்ளைகளுக்காகவா? யாருக்காக அவர் லஞ்சம் வாங்க வேண்டும்?

பா.ஜ.க.வை சேர்ந்த பிரதமர்கள் ஆகட்டும், இதர தலைவர்களாகட்டும் அவர்கள் மீது இதுவரை எந்தவொரு ஊழல் கறையும் பட்டது கிடையாது. முன்னர் எம்.பி.யாக இருந்த அத்வானி மீது ஊழல் குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டபோது, அவர் உடனடியாக பதவி விலகியதுடன் இந்த குற்றச்சாட்டில் இருந்து நான் விடுபடும்வரை பாராளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சபதம் செய்தார். இதுதான் நாங்கள் கடைபிடித்துவரும் அரசியல் சித்தாந்தம்.

எனவே, இன்றைய அரசியலில் நம்பகத்தன்மை என்பது இல்லாமல் ஆகிவிட்டது. தற்போதைய அரசியல்வாதிகள் வார்த்தைகளை அளந்துப்பேச வேண்டும். அதிலும், உண்மையை மட்டும் பேச வேண்டும். மக்களை ஏமாற்றும் வகையில் பொய்களை பேசுவதால் வெற்றியடைந்து விடலாம் என யாரும் நினைத்து விடக்கூடாது. 

வரும் பாராளுமன்ற தேர்தலில் இத்தகைய சவால்களை எல்லாம் நாங்கள் எதிர்கொண்டு வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை அமைப்போம் என அவர்களுக்கு நான் இன்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். #Modishonesty #Rajnathsingh
Tags:    

Similar News