செய்திகள் (Tamil News)

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராக பாராளுமன்றக்குழு சம்மன்

Published On 2019-02-11 12:43 GMT   |   Update On 2019-02-11 12:43 GMT
தேர்தலின்போது சமூக வலைத்தளங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி வரும் 25-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. #TwitterCEO #JackDorsey #TwitterCEOsummoned #parliamentarypanel
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு கட்சிகளின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பிரசாரங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது.

மாற்றுக்கட்சி தலைவர்களை தாக்கி பதிவுகளை இடுவதும் அதற்கு எதிர்தரப்பினர் பதில் கருத்து தெரிவிப்பதுமான அரசியல் விமர்சனங்களும், அரசியல் நையாண்டிகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பதிவுகளில் பல, சம்பந்தப்பட்ட நபர்களின் சொந்த கணக்குகள் மூலம் வெளியிடப்படவில்லை போலியான கணக்குகள் மூலம் வெளியாகி வருகிறது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலின்போது சமூக வலைத்தளங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக 7-2-2019 அன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரவை தொடர்பான பாராளுமன்றக்குழு சார்பில் பிரபல சமூக வலைத்தளங்களின் நிர்வாகத்தினருக்கு முன்னர் அழைப்பு அனுப்பப்பட்டது.

மிக குறுகிய காலத்தில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டி பாராளுமன்றக்குழுவுக்கு பதில் அனுப்பிய டுவிட்டர் நிர்வாகம் ஆஜராக வேண்டிய காலக்கெடுவை நீட்டிக்குமாறு முன்னர் கோரி இருந்தது. அதன்படி அந்த ஆலோசனை கூட்டத்துக்கான தேதி 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், டுவிட்டர் நிர்வாகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் இன்று பாராளுமன்றக்குழுவின் முன்னர் ஆஜராவதற்காக பாராளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். ஆனால், இளநிலை அதிகாரிகளான அவர்களுடன் ஆலோசனை நடத்த தொழில்நுட்பத்துறை அமைச்சரவை தொடர்பான பாராளுமன்றக்குழு மறுத்து விட்டதாக தெரிகிறது.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்லது அந்நிறுவனத்தின் சார்பில் சர்வதேச அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களிடம் மட்டுமே இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என தொழில்நுட்ப அமைச்சரவை தொடர்பான பாராளுமன்றக்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே ஒருமித்த கருத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே 15 நாட்களுக்குள் (25-ம் தேதியன்று) நேரில் ஆஜராக வேண்டுமென இன்று சம்மன் அனுப்பப்பட்டது. #TwitterCEO #JackDorsey #TwitterCEOsummoned #parliamentarypanel
Tags:    

Similar News