செய்திகள் (Tamil News)
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்த காட்சி

துலாபாரம் விழுந்து படுகாயம்-சசிதரூரை சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

Published On 2019-04-16 05:26 GMT   |   Update On 2019-04-16 05:26 GMT
துலாபாரம் விழுந்து படுகாயம் அடைந்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். #ShashiTharoor #NirmalaSitharaman
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளராக திவாகரனும், பாரதிய ஜனதா சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரனும் களத்தில் உள்ளனர். இந்த 3 வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

நேற்று மலையாள வருடப் பிறப்பு என்பதால் கேரளாவில் உள்ள கோவில்களில் விசே‌ஷ வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள காந்தாரி அம்மன் கோவிலுக்கு சசிதரூர் சென்றார். அங்கு அவர் வழிபாடு நடத்திவிட்டு தனது எடைக்கு எடை சர்க்கரை துலாபார காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.

இதற்காக தராசின் ஒரு தட்டில் சர்க்கரை வைக்கப்பட்டது. மறு தட்டில் சசிதரூர் அமர்ந்து இருந்த போது தராசின் கொக்கி உடைத்து அவரது தலையில் இரும்பு கம்பி விழுந்ததால் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதனால் சசிதரூரின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சசிதரூரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார். அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டு அறிந்தார்.

தன்னை நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தது பற்றி சசிதரூர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் ‘இது ஒரு நல்ல அரசியல். தேர்தல் பிரசாரத்திற்கு இடையில் நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.  #ShashiTharoor #NirmalaSitharaman
Tags:    

Similar News