செய்திகள் (Tamil News)

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு 17 இடங்கள்தான் கிடைக்கும்- மம்தா பானர்ஜி

Published On 2019-04-30 10:19 GMT   |   Update On 2019-04-30 11:26 GMT
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு 17 இடங்கள்தான் கிடைக்கும் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee

கொல்கத்தா:

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

மேற்கு வங்கம் மாநிலத்தில் எமர்ஜென்சி காலத்தில் இருந்ததை விட மோசமான செயல்களில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் அவர்களே செய்து வருகிறார்கள். இங்கு இணை அரசு ஒன்றை பா.ஜ.க.வினர் நடத்துகிறார்கள்.

பா.ஜனதா தலைவர்கள் உத்தரவின் பேரில்தான் மேற்கு வங்கத்தில் 4 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பு இத்தகைய அநியாயங்கள் நடந்தது இல்லை.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தன்னுடன் இருப்பதாக மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். மோடி ஒன்றை உணர வேண்டும்.

திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் யாரும் உங்கள் பக்கம் வர மாட்டார்கள். எங்கள் பக்கம் இருந்து ஒரு கவுன்சிலர் கூட உங்கள் பக்கம் வர மாட்டார்கள். மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறாரா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறாரா? என்று தெரியவில்லை.

பிரதமர் மோடி பாசிஸ்டுகளை விட மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் இப்படி இருந்தது இல்லை. எனவே பிரதமர் மோடி நிதானத்துடன் பேச வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் உங்களுக்கு முன்பு போல வெற்றி கிடைக்காது. உங்கள் வெற்றியை அகிலேசும், மாயாவதியும் சேர்ந்து தடுத்து விட்டார்கள். இந்த தடவை உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு அதிகபட்சம் 17 தொகுதிகளில்தான் வெற்றி கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு 7 அல்லது 8 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு மம்தாபானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee

Tags:    

Similar News