செய்திகள் (Tamil News)
புதுடெல்லியை வந்தடைந்த இந்திய ராணுவ விமானம்

வுகான் நகரில் இருந்து ராணுவ விமானத்தில் 76 இந்தியர்கள் மீட்பு

Published On 2020-02-27 06:40 GMT   |   Update On 2020-02-27 06:40 GMT
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரில் வசித்த 76 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய ராணுவ விமானம் இன்று டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வுகான் நகரில் வசிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்களை வுகான் நகருக்கு அனுப்பி 647 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்தது.

அவர்களை இரு குழுக்களாக பிரித்து டெல்லி, மானேசேரில் உள்ள ராணுவ மருத்துவ முகாமில் தங்க வைத்து 14 நாட்கள் கண்காணித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே வுகான் நகரில் தவிக்கும் மேலும் இந்தியர்களை மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக சி17 குளோபல் மாஸ்டர் ராணுவ விமானத்தில் சீனாவுக்கு மருத்துவ உபகரணங்களை கொண்டு சென்று பின்னர் அந்த விமானத்தில் இந்தியர்களை டெல்லிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. ஆனால் இந்திய விமானத்துக்கு சீன அரசு அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்தது.

பின்னர் இந்திய விமானத்துக்கு சீனா அரசு அனுமதி வழங்கியதையடுத்து நேற்று புறப்பட்டு சென்றது. வுகான் நகருக்கு சென்ற இந்திய ராணுவ விமானத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

வுகான் நகரில் வசித்த 76 இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த 23 பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர், மியான்மர், மாலத்தீவை சேர்ந்த தலா 2 பேர், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடாகஸ்கர் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 112 பேரை ஏற்றிக் கொண்டு இந்திய ராணுவ விமானம் புறப்பட்டது. இந்த விமானம் இன்று டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 76 இந்தியர்கள் உள்பட 112 பேருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் டெல்லி, மானேசேரில் உள்ள ராணுவ மருத்துவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுவரை 3 விமானங்கள் மூலம் 723 இந்தியர்களும், 43 வெளிநாட்டினரும் மீட்கப்பட்டுள்ளனர்.

Similar News