செய்திகள் (Tamil News)
அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த கோழி

அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த கோழி

Published On 2021-09-02 02:39 GMT   |   Update On 2021-09-02 02:39 GMT
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பேரேசந்திரா பகுதியில் இருந்து சோமேஸ்வரா கிராமத்திற்கு பயணித்த விவசாயி அவர் எடுத்து வந்த கோழிக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது..
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பேரேசந்திரா பகுதியில் இருந்து சோமேஸ்வரா கிராமத்திற்கு நேற்று ஒருவர் கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பஸ்சில் புறப்பட்டார். விவசாயியான அவர் தான் வளர்த்து வரும் ஒரு கோழியையும் எடுத்துச் சென்றார். பஸ்சில் ஏறியதும் அவரிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்டார்.

இதையடுத்து அந்த நபர் ரூ.10 கொடுத்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் எடுத்து வந்த கோழிக்கும் சேர்த்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று கண்டக்டர் கூறினார். இதனால் ஆதங்கம் அடைந்த விவசாயி கோழிக்கும் டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்று கண்டக்டரிடம் ஆவேசமாக கேட்டார்.

அப்போது கண்டக்டர் கண்டிப்பாக கோழிக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஆதங்கத்துடன் அந்த விவசாயி ரூ.5 கொடுத்து கோழிக்கும் டிக்கெட் எடுத்து பஸ்சில் பயணித்து சென்றார்.

மேலும் தான் டிக்கெட் எடுத்து இருப்பதால் கோழியை இருக்கையில்தான் வைப்பேன் என்று அந்த விவசாயி கண்டக்டரிடம் கூறினார். அதனால் செய்வதறியாது திகைத்த கண்டக்டர் ஒரு வழியாக கோழியை இருக்கையில் வைக்க சம்மதித்தார்.

பஸ்சில் கோழி டிக்கெட் எடுத்து இருக்கையில் அமர்ந்து பயணித்த இந்த ருசிகர சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

Similar News