மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பிறந்த ஏராளமான குழந்தைகள் உயிரிழப்பு
- உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளது.
- இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தனர்.
மகராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பிறந்த 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வா மருத்துவமனை என அறியப்படும் இந்த மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளும், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட 6 குழந்தைகளும் கடந்த மாதம் உயிரிழந்தது.
உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்தாண்டு மட்டும் இந்த மருத்துவமனையில் பிறந்த 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி - 17, பிப்ரவரி - 10, மார்ச் - 22, ஏப்ரல் - 24, மே - 16 ஜூன் - 21, குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தில் எத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கவிலை. ஆனால் நேற்று 2 குழந்தைகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் படேல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது, மகாராஷ்டிரா அரசா? மருத்துவமனை நிர்வாகமா? அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காததால் தான் குழந்தைகள் உயிரிழந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகாதார அமைச்சர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.