இந்தியா

குடிநீரை வீணடித்ததாக 22 குடும்பங்களுக்கு அபராதம்- பெங்களூரு அதிகாரிகள் அதிரடி

Published On 2024-03-25 09:27 GMT   |   Update On 2024-03-25 09:29 GMT
  • நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
  • தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.

இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.

Tags:    

Similar News