இந்தியா

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி... சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

Published On 2022-12-14 17:17 GMT   |   Update On 2022-12-14 17:17 GMT
  • பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உயிரிழப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும்.
  • கள்ளச்சாராயத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக்கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ சட்டசபையில் பேசினார்

பாட்னா:

பூரண மது விலக்கு அமலில் உள்ள பீகாரில் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பது அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக அகற்ற முடியவில்லை. இந்நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்களில் 24 பேர் உயிரிழந்தனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உறுதி செய்யப்படும்.

இந்த விவகாரம் சட்டசபையில் இன்று எதிரொலித்தது. எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் முதல்வர் நிதிஷ் குமார் கோபமாக அவர்களுக்கு பதிலளித்தார்.

கள்ளச்சாராயத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக்கொண்டிருப்தாகவும், ஆனால் முதல்வரோ எதையும் செய்யவில்லை என்றும் உள்ளூர் பாஜக எம்எல்ஏ ஜனக் சிங் குற்றம்சாட்டினார். 'இதுதொடர்பாக எத்தனை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது? கள்ளச் சாராயம் எப்படி என் கிராமத்திற்கு வந்தது? காவல் நிலையங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறீர்கள். ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க உங்களுக்கு உரிமை இல்லை' என்றும் ஜனக் சிங் ஆவேசமாக பேசினார்.

Tags:    

Similar News