உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது- தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
- பேருந்து விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல்
- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் சிவராஜ் சிங் சவுகான்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் டம்டாவில் இருந்து யமுனோத்ரி நோக்கி 28 பக்தர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக உத்தரகாண்ட் விபத்து குறித்து வருத்த தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உத்தர காண்ட் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உடல்களை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.