இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவம்: சர்ச்சை எழுந்த போதிலும் லட்டு விற்பனை குறைவில்லை

Published On 2024-10-14 03:23 GMT   |   Update On 2024-10-14 04:35 GMT
  • கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
  • கடந்த ஆண்டைவிட ரூ.2 கோடி அதிகம் வசூலாகி உள்ளது.

திருமலை:

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோவில். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் விழா கடந்த 4-ந் தேதி தொடங்கி கடந்த 12-ந்தேதி வரை கோலாகலமாக நடந்தது. விழாவில் மலையப்ப சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, கடந்த 8-ந் தேதி இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி தரிசனம் செய்ய மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் முதல் 8 நாட்களில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும் சிறிய லட்டுகள் 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனையானது. கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல், உண்டியல் மூலம் ரூ.26 கோடி வசூல் ஆனது. கடந்த ஆண்டைவிட ரூ.2 கோடி அதிகம் வசூலாகி உள்ளது. இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்க 45 டாக்டர்கள், 60 மருத்துவ பணியாளர்கள் பணியில் இருந்தனர். அத்துடன் பக்தர்கள் நலனுக்காக ஆந்திர அரசு பஸ்கள் 2 ஆயிரத்து 800 நடை இயக்கப்பட்டது.

திருமலையில் விற்பனை செய்யப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது. இருப்பினும், திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும், லட்டு விற்பனையும் குறையவில்லை என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News