பீகாருக்கு பட்ஜெட்டில் ரூ.30,000 கோடி ஒதுக்கவேண்டும் - நெருக்கடி கொடுக்கும் நிதிஷ்குமார்
- மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
- 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.
இந்நிலையில், நடப்பு பட்ஜெட்டில் பீகார் மாநில திட்டங்களுக்காக ரூ.30,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கேட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.