இந்த ஆண்டில் 4 கிரகண நிகழ்வுகள்... இந்தியாவில் காண முடியுமா?
- 2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது.
- செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது.
இந்தூர்:
சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகணங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை எதையும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டு கிரகணங்கள் நிகழ்வு குறித்து உஜ்ஜைன் நகரில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது:-
2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.
அதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க இயலாது.
அதேபோல் செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணமும் இந்தியாவில் காணப்படாது.
அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் புலப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.