இந்தியா

22-ந்தேதி பொது விடுமுறை: நீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்

Published On 2024-01-20 15:24 GMT   |   Update On 2024-01-20 15:24 GMT
  • 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
  • அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி (நாளைமறுதினம்) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரமுகர்கள், பக்தர்கள் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.

கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அரைநாள் பொது விடுமுறை அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலும் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது விடுமுறையை எதிர்த்து நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று நீதிமன்றம் நாளை இந்த மனுவை விசாரிக்கிறது.

நான்கு மாணவர்கள் அளித்துள்ள மனுவில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சி அதன் விருப்பத்திற்கு ஏற்ப பொது விடுமுறை அளிக்க முடியாது. மத நிகழ்ச்சியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்தது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். ஒரு அரசு எந்த மதத்துடனும் தொடர்பு கொள்ளவோ அல்லது ஊக்குவிக்கவோ முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை குல்கர்னி, நீலா கோகாலே நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரிக்கிறது.

கோவா, மத்திய பிரதேச மாநிலங்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News