இந்தியா

மகாராஷ்டிராவில் போலீஸ் என்கவுன்டர்- 4 நக்சலைட்கள் பலி

Published On 2024-03-19 09:34 GMT   |   Update On 2024-03-19 09:34 GMT
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
  • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News