காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்வு- பிரதமர் மோடி
- காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
- பாரீஸ் ஒலிம்பிக் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவரது 112-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் மோடி பேசியதாவது:-
காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. காதியின் விற்பனை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனை அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த தொழிலில் இருப்பதால் அவர்கள் அதிகமாக பயன் அடைகிறார்கள்.
நீங்கள் வெவ்வேறு வகையான ஆடைகளை வைத்திருக்கலாம். இதுவரை நீங்கள் காதி ஆடைகளை வாங்கவில்லை என்றால் அவற்றை வாங்க தொடங்குங்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக அரங்கில் மூவர்ண கொடியை பெருமையுடன் அசைக்க நமது விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு அளிக்கிறது. நாட்டுக்காக அவர்கள் குறிப்பிடத்தக்க ஒன்றை சாதிக்க வேண்டும்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஆதரிக்க வேண்டும். நாட்டுக்காக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
சில தினங்களுக்கு முன்பு கணித உலகில் ஒரு ஒலிம்பிக் நடந்தது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் இந்திய மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நமது அணி 4 தங்கப்பதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் அசாமில் உள்ள 'மொய்டாம்ஸ்' இடம் பெற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ந் தேதிக்கு முன்பு நீங்கள் எனக்கு ஆலோசனைகளை அனுப்புகிறீர்கள். இந்த ஆண்டும் உங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்புங்கள். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீங்கள் மூவர்ண கொடியுடன் உங்கள் செல்பியை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு மோடி உரையாற்றி உள்ளார்.