ஆண் துணை இல்லாமல் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 4 ஆயிரம் பேர் ஹஜ் பயணம்
- இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலமாக 1.4 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
- ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் மே மாதம் 21-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதாகும். ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டு இருந்தது.
45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மஹ்ரம்) இல்லையென்றாலும் அவர்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு தனியாக தங்கும் இடம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை உள்பட 25 விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆண் துணையின்றி 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 4 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலமாக 1.4 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் மொத்தம் 65,600 பெண்கள் யாத்ரீகர்கள் ஆவார்கள்.
60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களில் 15,753 பெண்களும், 81 முதல் 90 வயதுக்குட்பட்டவர்களில் 222 பெண்களும், 91 முதல் 100 வயதுக்குட்பட்டவர்களில் 7 பெண்களும் உள்ளனர். 2 பெண்களுக்கு 100 வயதுக்கு மேல் ஆகிறது.
45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஆண் துணை இல்லாமல் 4,313 பெண்கள் புனித ஹஜ் பயணம் மேற் கொள்கிறார்கள். 25 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அவர்கள் செல்கிறார்கள்.
இதில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அங்கிருந்து 2,807 பெண்கள் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 195 பேர் பயணமாகிறார்கள். உத்தரபிரதேசத்தில் இருந்து 222 பேரும், மராட்டியத்தில் இருந்து 162 பேரும் புனித பயணம் மேற் கொள்கிறார்கள்.
ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் மே மாதம் 21-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.