இந்தியா

எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் வீடு திரும்பினர்

Published On 2023-12-01 04:28 GMT   |   Update On 2023-12-01 04:28 GMT
  • தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
  • தொழிலாளர்கள் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன.

ரிஷிகேஷ்:

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 12-ந் தேதி அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கப்பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.

அதனை தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை 17-வது நாளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சுரங்கப்பாதையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழு, மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டது.

இதைத் தொடா்ந்து, சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்சுகள் மூலம் அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் 41 தொழிலாளர்களும் விமானப்படையின் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததையடுத்து அவர்கள் 41 பேரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.

முன்னதாக தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் டாக்டர் ரவிகாந்த் "தொழிலாளர்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன. அவர்கள் உடல் ரீதியாக இயல்பானவர்கள். மருத்துவ ரீதியாக நிலையானவர்கள். அவர்கள் வீடு திரும்புவதற்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்" என்றார். 

Tags:    

Similar News