சென்னையிலும் 5ஜி அறிமுகமாகிறது - ஆகாஷ் அம்பானி அறிவிப்பு
- பிரதமர் மோடி கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார்.
- 5ஜி மூலம் இயங்கும் வைபை சேவைகளை நாத்வாராவில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது. அப்போது ஆகாஷ் அம்பானி பேசியதாவது:
இந்தியாவின் உண்மையான 5ஜி வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வைபை வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து பொதுமக்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பிக்கிறோம்.
இதைத்தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5ஜி சோதனை செய்யவுள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது.
5ஜி சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிக அமைப்புக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
5ஜியில் இயங்கும் வைபை சேவையை மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.