5ஜி சேவை எப்போது கிடைக்கும்? மத்திய மந்திரி விளக்கம்
- 5ஜி சேவையை பொறுத்த வரை 4ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும்.
- அக்டோபருக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி:
5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. கடந்த ஜூலை 26-ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாளாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது.
ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், 5ஜி சேவை தொடர்பாக மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி சேவைகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறோம். அக்டோபர் 12-ம் தேதிக்குள் அறிமுகப்படுத்துவோம். அதன்பிறகு மற்ற நகரங்களில் மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.