டெல்லியில் காற்று மாசால் 69 சதவீத குடும்பத்தினர் பாதிப்பு- ஆய்வில் தகவல்
- டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் 21 ஆயிரம் பேரிடம் ஆய்வு.
- 69 சதவீதம் குடும்பத்தில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் நேற்றும் கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக டெல்லியில் மிகவும மோசமடைந்தது.
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31-ந்தேதி) இரவு காற்றின் தரநிலை 999 என்ற மோசமான நிலைக்கு சென்றதாக காற்று தரநிலை குறியீடு மூலம் தெரியவந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவிற்கு மோசமானதாகும்.
இதன் காரணமாக டெல்லியில் 69 சதவீத குடுமபத்தினரில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது டெல்லியில் வசிக்கும் 10 குடும்பத்தில் 7 குடும்பத்தில் ஒருவராவது காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் 21 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 69 சதவீதம் குடும்பத்தில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
62 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டது தெரிவித்துள்ளது. 46 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது மூக்கு ஒழுகுதல் போன்ற பாதிப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
31 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது. அதேபோல் 31 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது தலைவலியால் அவதிப்பட்டது தெரியவந்துள்ளது.
காற்று மாசால் 23 சதவீதம் குடும்பத்தில் ஒருவருக்காவது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 15 சதவீதம் குடும்பத்தில் ஒருவருக்காவது தூங்குவதில் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரநிலை மோசம் அடைவதற்கு அண்டை மாநிலங்களாக அரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பது முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.