இந்தியா

பயனாளியின் வீட்டிற்கே சென்று டீ போட்டு இலவச கியாஸ் சிலிண்டர் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு

Published On 2024-11-02 01:45 GMT   |   Update On 2024-11-02 01:45 GMT
  • இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
  • பல பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்.

பாராளுமன்ற தேர்தலோடு ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்று தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார்.

ஆந்திராவில் ஆட்சியை பிடித்தால் ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தீபம் என பெயரிட்டார்.

அதன்படி தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்நிலையில், இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் தீபம் திட்டத்தை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பயனாளியின் வீட்டிற்கே சென்ற சந்திரபாபு நாயுடு கியாஸ் சிலிண்டரை இணைத்து அவரே தேநீர் செய்து அருந்தினார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், "தேர்தலின் போது அளித்த சூப்பர் 6 வாக்குறுதிகளில் ஒன்றான ஆண்டுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை ஸ்ரீகாகுளம் மாவட்டம் இடுபுரத்தில் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் பெற்ற பெண்களின் கண்களில் இருந்த மகிழ்ச்சி எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.

இடுபுரத்தில் இதுபோன்ற இலவச கியாஸ் சிலிண்டர் பெற்ற சாந்தம்மா நான் இதற்கு முன்பு அறிமுகப்படுத்திய தீபம் 1 திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்ற பெண் என்பதை அறிந்து மேலும் மகிழ்ச்சி அடைந்தேன். நானே பயனாளியின் சமையலறைக்கு சென்று கேஸ் பற்றவைத்து தேநீர் தயாரித்து என் தோழர்களுக்குக் கொடுத்தேன்.

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமையலறையில் புகை இல்லை, பொருளாதாரச் சுமை இல்லை. பல பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவுவதில் நான் எப்போதும் முன்னணியில் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News