null
கேரளாவில் தொடரும் கனமழை- மின்னல் தாக்கியதில் 7 பேர் படுகாயம்
- மத்திய மற்றும் வடமாவட்டங்களில் மழையின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
- ஒரு சில இடங்களில் கன மழையாகவும், சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கும் காலத்திற்கு முன்பாக, நேற்றே தொடங்கி விட்டது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையாகவும், சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.
வயநாடு, ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கண்ணூர் அய்யன்குன்று பகுதியில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. அங்கு 80 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. தற்போது பருவ மழையுடன் தென்கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி சுழற்சியும் உருவாகி உள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மத்திய மற்றும் வடமாவட்டங்களில் மழையின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்கு கோழிக்கோடு கடற்கரையில் நேற்று இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு கடல் நீர் அடங்கிய பீப்பாய்களை லாரியில் ஏற்றிய அஷ்ரப், அனில், ஷெரீப், முனாப், சுபைர், சலீம், அப்துல் லத்தீப் ஆகிய 7 பேர் மின்னல் தாக்கி காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோழிக்கோடு கடற்கரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.