இந்தியா

7 வருடங்கள் கடந்தும் மறக்காத இன்னல்கள் - பண மதிப்பிழப்பு தினம்

Published On 2023-11-08 09:15 GMT   |   Update On 2023-11-08 10:05 GMT
  • பொதுத்துறை வங்கிகள் விடுமுறை இன்றி இயங்கும் என மோடி அறிவித்தும் அவை இயங்கவில்லை
  • புதிய நோட்டுக்கள் வேறு நீள, அகல பரிமாணங்களுடன் வெளிவந்தன

கடந்த 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று, இரவு சுமார் 08:15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஒரு திட்டமிடப்பட்டாத அவசர உரையாற்றினார்.

அந்த உரையில், அப்போது வரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அப்போதிலிருந்து செல்லாது என்றும் மக்கள் தங்கள் வசமுள்ள நோட்டுக்களை 2016 டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.


இதற்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரே ஒரு வாரம் மட்டும் அவ்வாறு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகள், மக்கள் சிரமத்தில் இருந்தும் தங்கள் விடுமுறையை விட்டுக்கொடுக்காமல் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்திற்கு புறம்பான வழியில் நடக்கும் "ஹவாலா" பணபரிமாற்றம், கள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், வருமானவரி கட்டாமல் பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்த கருப்பு பணம் ஆகியவற்றின் மூலம் நடக்கும் பரிமாற்றம் "கருப்பு பொருளாதாரம்" என அழைக்கப்படும். இதற்கு எதிராக எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு முக்கிய அம்சமாகவும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணத்தில் சம்மட்டி அடியை கொடுக்கவும், இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அப்போதைய இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அதிகளவில் வைத்திருப்பவர்கள் வங்கியில் தங்கள் பணத்தை செலுத்தி விகிதாசார முறையில் தினமும் புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

ஆனால், கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இதன் மூலம் தாங்கள் எதிர்காலத்தில் வருமான வரி துறையிடம் சிக்கி கொள்ள நேரிடும் என்பதால் இதற்கு முன்வரவில்லை. ஒரு சில வங்கி அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன் வங்கியில் இருந்து புதிய நோட்டுக்களை ரகசியமாக பெற்று கொண்டு, கணக்கில் காட்டாமல் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

2016 நவம்பர் 8லிருந்து டிசம்பர் 30 வரை, சுமார் 50 நாட்கள் மக்கள் வங்கிகளில் தங்கள் வசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ள மிக நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் பணம் இல்லாமல் தங்கள் தேவைகள் தடைபட்டு சிலர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், பெறவும் மக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

மத்திய ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக அச்சடித்து வெளியிட்ட புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புது நீள, அகல பரிமாணங்களை கொண்டிருந்ததால் பணம் வழங்கும் இயந்திரங்களையே (ATM) புதுப்பிக்க வேண்டியிருந்தது. இது குழப்பத்தை மேலும் அதிகரித்தது.


இந்தியாவின் சில்லறை வர்த்தகத்திலும், மொத்த விற்பனையிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த நோட்டுக்கள் திடீர் என செல்லாததாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தனர்.

அன்றிலிருந்து இந்திய பொருளாதாரம் சுமார் 1 வருடத்திற்கு ஸ்தம்பித்தது.

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2023 ஜனவரி மாதம், "அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், அப்போது மக்களிடம் அறிமுகம் பெற தொடங்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை, தற்போது வரை மிகவும் பிரபலமாக உள்ளது. உலகிலேயே வல்லரசு நாடுகளை காட்டிலும் அதிகமாக டிஜிட்டல் பணப்புழக்கம் இந்தியாவில்தான் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் பணப்பரிமாற்ற வழிமுறையில் யாரிடமிருந்து, எவருக்கு, எப்போது, எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு பண வழித்தடத்தை (money trail) கண்டறிவது அரசுக்கு சுலபம் என்பதால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் அரசிடம் சிக்கி கொள்வார்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



2016, நவம்பர் 8 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களும் சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசின் நோக்கங்கள் திட்டமிட்டபடி நிறைவேறியதா அல்லது தோல்வியுற்றதா என்பது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தற்போது வரை நிலவுகின்றன.

இன்று நவம்பர் 8, பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தினம். அரசின் முடிவை விமர்சித்தாலும், இந்தியர்கள் எங்கும் போராடாமல் அமைதி காத்து மத்திய ரிசர்வ் வங்கியுடன் ஒத்துழைத்தனர்.

7 வருடங்கள் கடந்தும் மக்கள் அந்த காலகட்டத்தில் தாங்கள் பட்ட இன்னல்களை மறக்கவில்லை.

Tags:    

Similar News