இந்தியா

கொல்கத்தா சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்கு பத்ம விருது பெற்ற 71 மருத்துவர்கள் கடிதம்

Published On 2024-08-19 02:25 GMT   |   Update On 2024-08-19 02:25 GMT
  • மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
  • பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி நாடு முழுக்க மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் போராட்டமும் நடந்து வருகிறது. உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குற்றவாளியை விரைந்து தண்டிக்க வேண்டியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், 'கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் நாட்டில் பெண்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகிறது.

நமது நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளால் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News