தீபாவளிக்கு படையெடுத்த மக்கள்- கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயம்
- ரெயிலின் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தபோது படுகாயம்.
- காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரெயில் நிலையத்தில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கிச் சென்ற ரெயிலில் பயணிகள் ஏற முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதில், 7 பேரின் நிலை சீராக உள்ளதாகவும், இருவர் எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில், நடைமேடையில் பெரும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பாந்த்ராவிலிருந்து கோரக்பூருக்குச் செல்லும் ரயில் எண் 22921 நிலையத்தின் பிளாட்பாரம் எண் 1-க்கு ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் விரைவாக ஏறுவதற்கு ரெயிலின் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பயணிகள் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதில், ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிற பயணிகள் தரையில் ரத்தக் காயங்களுடன் இருந்தவர்களை மீட்டு ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், ரெயில் நிலையத்தின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயணிக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது மற்றும் சில பயணிகளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கிடையில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.